இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த 10 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ரூ.60,000 கோடி கடனில் இருப்பதால் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது.
இதையெடுத்து ஏர் இந்தியாவின் மொத்த அதிகாரத்தையும் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென்றும், கடன் நிலுவையில் உள்ள பெரும் பகுதியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் முடிவுசெய்து ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு ஏர் இந்தியாவை ஏலம் எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் 100% பங்குகளை டாட்டா நிறுவனத்துக்கு விற்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தை மத்திய அரசு கடந்த 11ம் தேதி டாட்டா நிறுவனத்திடம் அளித்துள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா பங்குகளை டாட்டா நிறுவனம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது. இதில் மத்திய அரசு மற்றும் டாடா நிறுவனமும் கையெழுத்திட்டது என்று முதலீட்டு துறைச் செயலாளர் துஹின் கர்ந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.