எஸ்.என்.ஆர் பிலிம்ஸ் சார்பாக சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டியர் டெத்”. சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதி உள்ளார். இந்த படத்தை பிரேம் குமார் இயக்க, அசோக் சாமிநாதன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இப்படத்திற்கு நவீன் அண்ணாமலை இசையமைத்துள்ளார். தற்போது படம் பற்றி இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது “இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ்வாக தான் பார்க்கப்படுகிறது.
இறப்பு ஒரு மனிதனாக நம்மிடத்தில் பேசினால் எப்படியிருக்கும் என்பது தான் இந்த படத்தின் கதை. அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி நிஜத்தில் நடந்த நிகழ்வுகளையும், கொஞ்சம் கற்பனையையும் கலந்து இப்படம் உருவாகியுள்ளது. இதில் காதல், அம்மா, குழந்தை, நட்பு என 4 கதைகள் இடம்பெற்றுள்ளது. இந்த 4 கதைகளுடன் இறப்பு எப்படி தொடர்புபடுத்தப்படுகிறது என்பதனை ஹைபர்லிங்க் முறையில் கூறியுள்ளோம். சென்சாரில் யு சான்றிதழ் பெற்றிருக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது” என்று அவர் கூறினார்.