ஏரியில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கோடி பள்ளம் பகுதியில் முருகன்-நித்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபிகா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி இயற்கை உபாதையை கழிப்பதற்காக மாணவி தீபிகா பள்ளப்பட்டி ஏரி கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து மகள் வெளியில் சென்று நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என்பதால் பெற்றோர் மாணவியை தேடி பார்த்துள்ளனர். அப்போது மாணவி தீபிகா உடல் பள்ளப்பட்டி ஏரியில் மிதந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.