தர்மபுரியில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாகக் கூறி 202 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக இன்று முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் விரக்தி அடைந்த மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே தான் இருக்கும் இப்படியே சென்றால் பிழைப்பு என்னாவது என வெளியில் சுற்றித் திரிவதும், தடைகளை மீறி கடைகளை திறப்பதுமாக,
தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். அதன்படி ஊரடங்கு விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்கள், வெளியே நடமாடியவர்கள், தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் தடையை மீறி கடைகளை திறந்தவர்களேன, கிட்டத்தட்ட 202 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
70 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 14 பேர் சாராயம் காய்ச்சுவது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்பதும், அவர்களிடமிருந்து 52 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.