ஒரு சமுதாயத்தினரை திட்டியதோடு அவர்களை தாக்கிய 16 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் ராமு என்பவர் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள சிதம்பர நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றிணைந்து ஊர்க்கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து இந்த கூட்டத்தில் ராமுவின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய நிலங்களை வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த சிலரிடம் அடமானம் வைத்துள்ளார்கள். அதனால் அந்த நிலத்தினை அடமானம் பெற்றவர்கள் தங்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய கூடாது என்றும் வேறு ஒருவரிடம் நிலத்தை விற்க கூடாது என்றும் அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்த வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த மோகன் குமார், அசோக், லட்சுமணன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேறு சிலரைத் தூண்டி விட்டனர்.
அந்தத் தூண்டுதலின் படி வெண்ணங்குழி கிராமத்தில் வசிக்கும் அப்பு, சந்துரு, விமலநாதன் உள்ளிட்ட 16 பேர் இணைந்து ராமுவின் சமுதாயத்தை சேர்ந்த ராஜபாண்டி, ஆனந்த் மற்றும் சஞ்சய் ஆகியோரின் சாதிப்பெயரை சொல்லி திட்டியதோடு மட்டுமில்லாமல் அவர்களை தாக்கி உள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்த கார், மோட்டார் சைக்கிள், கடை ,வீடு போன்றஅனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 16 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்