டெல்லியில் உள்ள மோஹல்லா ஆஸ்பத்திரியில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை சேர்ந்த 3 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை கூறியபோது, கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை மட்டும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் (இருமல் மருந்து) நச்சு காரணமாக 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
இவர்கள் அனைவரும் 1 முதல் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். இதில் பெரும்பாலான குழந்தைகள் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள்” என தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு 4 நபர்கள் அடங்கிய விசாரணை குழு ஒன்றை அமைத்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது, “டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் மருந்து பெரும்பாலும் இருமலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த மருந்தை அதிக அளவில் உட்கொண்டால் தூக்கமின்மை, மயக்கம், வாந்தி, மூச்சு திணறல், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த மருந்து தயாரிப்பை நிறுத்தவும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.