Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசியல் பிரமுகரின் கொலை வழக்கு…. போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம்…. 3 பேரிடம் விசாரணை….!!

அரசியல் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியில் ரஜினி பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய பாலை பட்டாபிராமனின் வளரும் தமிழகம் கட்சியில் தெற்கு மாவட்டச் செயலாளராக ரஜினிபாண்டி இருந்துள்ளார். இந்நிலையில் ரஜினிபாண்டி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் சீனிவாசன், ஜவகர், தேஷ்முக்சேகர் சஞ்சய், சுகுணா சிங் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எடையூர் பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டதால் எடையூர், சங்கேந்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திருத்துறைப்பூண்டி தாலுகா பகுதியில் உள்ள மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கள்ளிக்குடி முதல் உதயமார்த்தாண்டபுரம் வரை ஈ.சி.ஆர். சாலையில் பெரும்பாலான காவல்துறையினர் திரண்டனர்.

இந்நிலையில் ரஜினிபாண்டியனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆரியலூர் நோக்கி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது இறுதி ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆகவே ரஜினிபாண்டியன் உடல் பெரும்பாலான போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் செல்லும்போது வடசங்கேந்தி அருகில் சடலத்தை மாற்று வழியில் கொண்டு செல்வது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஜினிபாண்டியன் சடலம் அவரது சொந்த இடத்திற்கு சென்று மாலை 5 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் கொலை வழக்கு தொடர்பாக எடையூர் காவல்துறையினர் சந்தேகத்தின்படி 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |