தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில், ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதா தெரிவிக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் நிறைவடைந்துள்ளது. தற்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ” மே 17ம் தேதி வரை அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி வழங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தளர்வு இல்லை. சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை. சென்னையில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். ஹார்டுவேர், சிமெண்ட், எலெக்ட்ரிக், பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 11 மணி முதல் 5 மணி வரை இயங்கலாம்” என்பன போன்ற பல்வேறு தளர்வுகள் இடம் பெற்றுள்ளன.