கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 38 டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகள் அருகிலுள்ள பார்களை திறக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 218 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றது. இவற்றில் 61 கடைகளில் மட்டுமே பார் வசதி இருந்தது.
ஆனால் கடை வாடகை பிரச்சினை, வைப்பு தொகை, ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் 38 டாஸ்மாக் பார்கள் மட்டுமே திறக்கப்பட்டது. இவ்வாறு சேலம் மாநகரில் பார்களை திறப்பதற்கு முன் அதன் உரிமையாளர்கள் திருஷ்டி பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைத்தனர். அதன்பின் மதுபிரியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு மகிழ்ச்சியுடன் மது அருந்தினர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியபோது “தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் டாஸ்மாக் பார்கள் திறக்கலாம் என்று அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே பாரில் மது அருந்த வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். மேலும் பார் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி குறைந்தபட்சம் 6 அடி வீதம் இடைவெளி விட்டு மது அருந்த அனுமதி கொடுக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து டாஸ்மாக் பார்களில் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.