மதுக்கடைகளை அடைக்கக்கோரி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகளை நிரந்தரமாக அடைக்கக்கோரி பா.ம.க சார்பாக சத்துவாச்சாரி திரு.வி.க நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி என்.டி. சண்முகம் வீட்டின் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.எஸ். இளவழகன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி என்.டி சண்முகம் முன்னிலை வகித்தார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இவ்வாறு போராட்டத்தில் மதுக்கடைகளை அடைக்கக்கோரி கையில் கருப்புக் கொடிகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியும் முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோன்று குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. ரவி தலைமையில், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் ஜி. சுரேஷ் குமார், இளைஞரணி துணைச் செயலாளர் என். குமார், மாவட்ட பொருளாளர் லாவண்யா, ஒன்றிய செயலாளர் எம்.கோபி மற்றும் அதிகாரிகள் பலர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து சேங்குன்றம் பகுதியில் மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர். பாலாஜி தலைமையிலும், கல்லப்பாடி மோட்டூர் பகுதியில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கே செந்தில் குமார் தலைமையிலும், சீவூர் பகுதியில் மாவட்ட துணைச் செயலாளர் சி.மூர்த்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் சுற்றுப்புற கிராம பகுதிகளிலும் பா.ம.க.வினர் மதுக்கடைகளை அடைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு மதுபாட்டில்களை உடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி உள்ளிட்ட 20 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.