மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் ஈரோடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவர் நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்து மாதத் தவணையில் விற்பதாக விளம்பரம் செய்திருந்தார். இதனால் நாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை முன்பணமாக அவரிடம் கொடுத்துள்ளோம்.
இதனையடுத்து அந்த நபர் எங்களுக்கு இடங்களை காண்பித்தார். இதனை நாங்கள் நம்பி கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அவரிடம் ரொக்கமாக பணம் கொடுத்த்தோம். இதில் ஒவ்வொருவரும் அவர்களது இடத்தின் சதுர அடிக்கு தகுந்தவாறு 2 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரை அந்த நபரிடம் செலுத்தியுள்ளனர். அதன்பின் தங்களிடம் பல லட்சம் ரூபாய் வரை வாங்கிக்கொண்ட அவர் இதுவரையிலும் எந்த இடத்தையும் கிரயம் செய்து கொடுக்கவில்லை மற்றும் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
எனவே தற்போது அந்த நபர் தலைமறைவாகி இருக்கின்றார். மேலும் எங்களைப்போல் 45 நபரிடம் பல லட்சத்தை அந்த நபர் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆகவே அவரை கண்டுபிடித்து நாங்கள் செலுத்திய பணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். இவ்வாறு எங்களை ஏமாற்றிய அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.