நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டையில் கூட்டுறவு நூற்பாலையானது இயங்கி வந்தது. ஆனால் இந்த ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி கடந்த 2004-ஆம் ஆண்டு திடீரென்று அடைக்கப்பட்டது. இதன் காரணமாக 250 நிரந்தரம் மற்றும் பல ஆயிரத்துக்கும் மேல் உள்ள மறைமுகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்தனர். இதனையடுத்து இந்த நூற்பாலையை மீண்டும் திறக்ககோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நூற்பாலையை மீண்டும் திறக்ககோரி அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது பஞ்சாலை தொழிலாளர் சங்கம் மற்றும் கைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பாக நடந்த இந்த போராட்டத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கும் கூட்டுறவு நூற்பாலை மீண்டும் திறக்ககோரி கோஷங்களை எழுப்பினர். இந்த மாவட்டத்தில் நெசவாளர்கள் அதிகமாக வசித்து வருவதால் கூட்டுறவு நூற்பாலையை திறக்கும் பட்சத்தில் பல்லாயிரம் நபர்களுக்கு நேரடி வேலை கிடைக்கும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.