பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சாத்தான்குளத்தில் கிருபைராஜ்-புஷ்பலதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புஷ்பலதா மசாலா கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக புஷ்பலதா காமராஜ் நகர் விலக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேர் புஷ்பலதாவை வழிமறித்து தாக்கியதோடு, அவரது கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் புஷ்பலதாவின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். இதனையடுத்து சிலர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வழிப்பறி திருடர்களை துரத்தி சென்றனர்.
அதன்பின் சாத்தான்குளம் அருகில் உள்ள பண்டாரபுரத்தில் வைத்து அந்த 2 திருடர்களையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த 2 திருடர்களுக்கும் தர்ம அடி கொடுத்து சாத்தான்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அந்த திருடர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள் விஜயநாராயணம் ஆணியன்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துக்குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர்.