இந்திய திரையுலகில் முன்னணி திரைப்பட ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வருபவர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம் மற்றும் அலைபாயுதே போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கின்றார். இதனை அடுத்து விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார்.
மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று அனைவரிடமும் உண்மையை பேசியுள்ளார். நேரடி தொடர்பும் வெளிப்படை தன்மையும் அச்சமின்மையும் இருக்கும் இன்றைய உலகில் இது அவரது வலிமையைக் காட்டுகின்றது. அவர் இன்னும் உயர்ந்து நிற்கிறார்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.