Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதற்காக மோதி கொண்ட இருதரப்பினர்…. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு…. பெண்கள் உட்பட 50 பேர் கைது….!!

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் வைத்துள்ள கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறி வந்தனர். இந்நிலையில் கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் மற்றொரு சமூகத்தினர் பேனர்கள் வைப்பதை கண்டித்து திருவைக்காவூர் ஊராட்சி மன்னிக்கரையூர், எடக்குடி, நடுபடுகை உள்ளிட்ட கிராம மக்கள் மண்ணியாற்றுப் பாலத்தில் அமர்ந்து கடந்த 17-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் மதுசூதனன், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் மறுநாள் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மதுசூதனன் தலைமையில் இருதரப்பினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் மாலை வேளையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெலட்டூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா, கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் 2 காவல்துறையினருக்கு பலத்த காயமடைந்து அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த மோதலிலினால் இருதரப்பை சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதுமட்டுமின்றி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் ரவளிப்பிரியா, சுகுணாசிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் இரவு முழுவதும் திருவைக்காவூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 10 பெண்கள் உள்பட 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து திருவைக்காவூர் கிராம முழுவதிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமத்துக்குள் அனுமதி இன்றி யாரும் செல்லவோ, அங்கிருந்து வெளியே போகவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |