போதையின் உச்சத்தில் மதுவுக்கு பதில் பெட்ரோலை குடித்து ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு என்கிற சேதுராமன் வசித்து வந்தார். இவர் முன்பு ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால் அப்பகுதி மக்களுக்கான பணிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து நல்ல பெயர் எடுத்து வந்தார். இதற்கிடையில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் 6/12/2021 அன்று பெட்ரோல் பங்கிற்கு சென்ற ஊராட்சி மன்ற தலைவர் தமது இருசக்கர வாகனத்திற்கு பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். அதேசமயம் ஊராட்சி மன்ற தலைவர் டாஸ்மாக் கடைக்கு சென்று குடிப்பதற்காக மதுபாட்டில்களும் வாங்கியுள்ளார். இதனையடுத்து அவர் ஒரு இடத்தில் அமர்ந்து இரு பாட்டில்களையும் அருகே வைத்துவிட்டு முதலில் மது குடித்துள்ளார்.
அதன்பின் போதை அதிகமான ஊராட்சி மன்ற தலைவர் மேலும் குடிப்பதற்கு மது பாட்டிலுக்கு பதிலாக அங்கு இருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். இதன் காரணமாக மயக்கமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் ஊராட்சி மன்ற தலைவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஊராட்சி மன்ற தலைவரான சேதுராமன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.