மணல் திருடிய வழக்கில் கைதான ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் திருடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து உள்ளனர். இதனையறிந்த செந்தில்ராஜ் அப்போது அப்பகுதிக்குச் செல்லவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்ராஜை கைது செய்து அவரிடம் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் செந்தில்ராஜ் ஜாமினில் வெளியே வந்தால் தொடர்ந்து இதுபோன்ற மணல் கடத்தலில் ஈடுபடுவார் என்றும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மாவட்ட ஆட்சியாளர் ரத்னாவிடம் பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியாளர் செந்தில்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகலை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் செந்தில் ராஜனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.