மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் சுப்பையா- சுப்புலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவசுப்பிரமணியன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மகளுக்கு திருமணம் முடிந்து கோயம்புத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இதில் மகனுக்கு 35 வயதான நிலையில் பெற்றோர் அவருக்கு திருமணத்திற்காக பெண் தேடி வந்தனர்.
ஆனால் பல இடங்களில் பார்த்து மகனுக்கு பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சுப்பையா இருந்து வந்தார். இதனால் மனைவி உறவினரை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு சென்றார். இந்நிலையில் சுப்பையா டீ குடிப்பதற்காக வீட்டிலிருந்து கடைக்கு சென்றார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் சுப்பையா வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது ஊருக்கு கிழக்கே உள்ள சுடுகாட்டில் சுப்பையா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பையாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.