மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 92 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈராக் நாட்டில் உள்ள மருத்துவமனையில் திடீரென்று கொரோனா சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், நாசிரியா நகரில் உள்ள அல்-ஹூசைன் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்பட்டதால் தீ மளமளவென பரவியது .இந்த விபத்தில் சிக்கி 92 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ,மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிலர் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாகவும் , ஒரு சிலர் ஆக்ஸிஜன் உருளை வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து நடந்த இடத்தில் குவிந்த பாதிக்கப்பட்ட உறவினர்கள் விபத்தை முன்கூட்டியே தடுக்க அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டினர்.இதனால் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்நாட்டில் தொடர்ந்து 2-வது முறையாக மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக தலைநகர் பாக்தாதில் உள்ள அல் -காதீப் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 82 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்த விபத்தில் ஆக்ஸிஜன் உருளை வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . ஆனால் அப்போது அந்த மருத்துவமனையில் தீயணைப்பு எச்சரிக்கை கருவிகள் மற்றும் தீயணைப்பு வசதிகள் இல்லாததே இத்தனை உயிரிழப்புக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.