உயிரிழந்தவர்களின் சடலத்தை ஒப்படைப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளரை பணியிட மாறுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றார்கள். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் சடலத்தை பாதுகாப்பான முறையில் கொடுப்பதற்கு அரசின் இலவச அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இவ்வாறு இறந்தவர்களின் சடலத்தை அனுப்பி வைப்பதற்கு 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து பிணவறையில் வேலையில் இருந்த சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்தவர்களின் சடலத்தை உறவினரிடம் ஒப்படைப்பதற்கு லஞ்சம் கேட்டுள்ளார். எனவே உறவினர்களும் இறந்தவர்களின் சடலத்தை பெறுவதற்காக வேறு வழி இல்லாமல் சுகாதார ஆய்வாளரான வெங்கடேஷ்க்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் சண்முகசுந்தரம் லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் வெங்கடேசனை பணியிட மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி இளங்கோ மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் இடத்தில் பணியாற்றிய மற்றொரு வெங்கடேசன் ஆகியோரும் பணியிடை மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்பின் புகார் குறித்து சுகாதார ஆய்வாளர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்டு சுகாதார பணிகள் இணை இயக்குனரால் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் அவரை விசாரிப்பதற்கு வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், சென்னை தலைமையிடத்து சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.