இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 15-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு சிறுமி ஒருவர் தான் வளர்த்து வரும் நாய்க்குட்டிக்கு தடுப்பூசி போடா வந்ததால் முகாமில் குதூகலம் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் அந்த நாய்க்குட்டியை தூக்கி கொஞ்சுகின்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த மருத்துவர் நாய்க்குட்டியிடம் உன் பெயர் என்ன, கொரோனா தடுப்பூசி செலுத்த வந்துள்ளாயா என்று கேட்டார். மேலும் நாய்க்குட்டியிடம் இதுவரை உங்களுக்காக தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை என்று செல்லமாக கூறியதோடு, அப்படி கண்டுபிடித்தால் முதலில் உனக்கு தான் அந்த ஊசியை போடுவேன் என்று அந்த நாயிடம் பெண் மருத்துவர் அன்புடன் விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.