நடிகர் அஜித், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார்.
துணிவு படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வைசாக் எழுதியுள்ள 2வது பாடலான “காசேதான் கடவுளடா” பாடல் வெளியாகி இருக்கிறது. இதை வைசாக், மஞ்சு வாரியர் இணைந்து பாடி உள்ளனர். எனினும் இப்பாடலில் மஞ்சு வாரியர் எங்கு பாடியிருக்கிறார் என்றே தெரியவில்லை என இணையதளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் பதிவிட்டு கேலி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு மஞ்சு வாரியர் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது “காசேதான் கடவுளடா பாடலில் என் குரல் கேட்கவில்லை என கூறுபவர்கள் கவலைப்பட வேண்டாம். பாடலின் வீடியோ வெர்ஷனுக்கான எனது குரல் ரெக்கார்டு செய்யப்பட்டு உள்ளது. உங்கள் அக்கறைக்கு நன்றி. இதற்கிடையில் வேடிக்கையான ட்ரோல்களை நான் ரசித்தேன்” என டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.