Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அதில் பணம் இல்லை” வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் நடவடிக்கை….!!

ஏ.டி.எம். மையத்திற்கு வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் உள்ள ஒரு வங்கி வாசலில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம்-க்கு வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களது கார்டை பயன்படுத்தி பணத்தை திருடி வந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வேப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சத்துணவு உதவியாளர் ஆனந்தவல்லி தனது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக திருவிடைமருதூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஏ.டி.எம். அருகில் நின்ற வாலிபர் ஒருவரிடம் ஆனந்தவல்லி தனது கார்டை கொடுத்து 70 ஆயிரம் ரூபாய் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.

இதனால் வாலிபர், ஆனந்தவல்லிக்கு உதவி செய்வதுபோல் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்திவிட்டு அதில் பணம் இல்லை என்று அவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் ஆனந்தவல்லியிடம் வேறு ஒரு போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். அதன்பின் ஆனந்தவல்லி வெளியில் சென்று மற்ற ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது பணம் வராததால் ஆனந்தவல்லி அதிர்ச்சயடைந்தார். இதனிடையில் ஆனந்தவல்லியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொண்ட மர்ம நபர் அவரது வங்கி கணக்கில் இருந்து 70 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஆனந்தவல்லி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து ஏ.டி.எம் மையங்களில் பணத்தை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த பீட்டர் பிரபாகரன், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம், கடலூர் மாவட்டம் தண்டக்காரன்குப்பம் மேல தெருவைச் சேர்ந்த விக்னேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆனந்தவல்லி பறிகொடுத்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம்  17 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |