அனுமதி இல்லாமல் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கலைஞானபுர பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 பேர் இரண்டு லாரிகளில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் தச்சன்விளை பகுதியில் வசிக்கும் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் மற்றும் பின்டுரானா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மணல் கடத்திய குற்றத்திற்காக அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.