யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு மற்றும் சுலோவாகியா அணிகள் வெற்றி பெற்றது .
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் செக் குடியரசு – ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் 32 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ,1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்ததாக 2 வது பாதியில் பாட்ரிக் 52 வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடிக்க, இறுதியாக 2-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை தோற்கடித்து செக்குடியரசு வெற்றி பெற்றது. இதையடுத்து ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மற்றொரு போட்டியில் போலந்து – சுலோவாகியா அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் சுலோவாகியா அணி 18-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இதில் சுலோவாக்கியா வீரன் ராபர்ட் மேக் கோலை நோக்கி பந்தை அடிக்க, போலந்து அணியின் கோல் கீப்பர் செஸ்னியின் மேல் பட்டு கோல் வலைக்குள் புகுந்ததால் ஓன் கோல் ஆனது.
இதன் பிறகு 46 வது நிமிடத்தில் போலந்து வீரர் கரோல் லினிட்டி பதில் கோல் அடித்தார். ஆனால் 62 வது நிமிடத்தில் போலந்து அணி வீரர் கிரிஜோவியாக் எதிரணி வீரரை பவுல் செய்ததால் நடுவர் அவருக்கு ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார். இதனால் போலந்து அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது . அடுத்ததாக சுலோவாகியா வீரர் மிலன் கிரினியர் 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவாகியா அணி வெற்றி பெற்று ,போலாந்துக்கு அதிர்ச்சியளித்தது .இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் ஸ்வீடன் – ஸ்பெயின் அணிகள் மோதிக்கொண்டன. இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் எந்த ஒரு அணியும் கூட அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி சமனில் முடிந்தது.