ஐரோப்பிய நாடுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பலர் உயிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வெள்ளத்தால் அதிக பாதிப்படைந்திருக்கிறது. எனவே தினசரி உயிரிழப்புகள் அதிகரித்திருக்கிறது. தற்போது வரை சுமார் 60 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் முழுக்க பாதிப்படைந்தது.
சாலையில் நின்ற வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றது. ஜெர்மனியில் மட்டும் பலர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் கூரைகளின் மேல் அமர்ந்து உதவி கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் எட்டு உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நீர்த்தேக்கங்களிலும், ஆறுகளிலும் கரைகளை உடைக்கும் வகையில் கன மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் Rhineland-Palatinate என்ற மாகாணத்தின் ஆளுநரான Malu Dreyer என்பவர், இவ்வாறான பேரழிவை தற்போது வரை மாகாணம் சந்தித்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு பகுதிகளில் மின் தொடர்பு, தொலைபேசி சேவை முடங்கியது. மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாக பாதிப்படைந்த இடங்களில் ஜெர்மன் ராணுவத்தினர் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர். தற்போது வரை 200 நபர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.