நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக ஆர்வத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் பணி முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் முகாம் அமைக்கப்பட்டு கோவேக்சின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு காலை 8 மணியில் இருந்து டோக்கன் வழங்கி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அதன்படி முதலில் வந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளியுடன் கல்லூரிக்கு வெளியில் வரை பொதுமக்கள் வரிசையில் நின்றனர். ஆனால் ஏராளமானோருக்கு தடுப்பூசி டோக்கன் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றமடைந்து சென்றுள்ளனர். எனவே அவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு வெளியூரிலிருந்து காலையில் வந்து காத்திருந்தும் தங்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை என்று பலர் குற்றம் சாற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5- ம் தேதி நிலவரப்படி 1 லட்சத்து 82 ஆயிரத்து 757 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 24 ஆயிரத்து 122 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியின் செலுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.