இந்தியக் கடற்படை வீரர்கள் இலங்கை மீனவர்களை தாக்கியதாக கூறப்படும் செய்திகள் பொய் என்று இந்தியத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது பல காலமாகவே நடந்து வருகிறது. அவ்வப்போது அவர்கள் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது ,அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இதில் திடீர் திருப்பமாக இந்தியக் கடற்படை இலங்கை மீனவர்களை தாக்கி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் தாக்குதல் குறித்து இலங்கையை சேர்ந்த 13 மீனவர்கள் கூறியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து 13 மீனவர்கள் கூறியிருப்பதாவது, “நாங்கள் 2 மீன்பிடிப் படகுகளில் மொத்தம் 13 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தோம். இந்நிலையில் கடந்த 4ம் தேதி நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இந்திய கடற்படை வீரர்கள் எங்களை கடுமையாக தாக்கி போதை மருந்து கேட்டனர் “,இவ்வாறு அந்த மீனவர்கள் கூறியதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது.எனவே இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் , இந்தியாவுடனான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அந்நாட்டு மீன்வள அமைச்சக செயலாளரான இந்து ரத்னநாயகே தெரிவித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு இந்தியத் தூதரகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்திய கடற்படை வீரர்கள் இலங்கை மீனவர்களை அடித்து தாக்கியதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அப்பட்டமான பொய் என்றும் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் அதோடு இந்திய கடற்படை வீரர்கள் ஒழுக்கமாகவும் அப்பழுக்கற்ற முறையில் தங்களது கடமைகளை ஆற்றி வருகிறது .மேலும் இந்தியா-இலங்கை இடையே இருக்கும் மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பதற்கு தீர்ப்பதற்கு இந்தியா உறுதி அளித்துள்ளது .