2021 ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீல நிற ஜெர்சியில் விளையாட உள்ளனர்.
2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது .இதில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீலநிற ஜெர்சியில் விளையாட உள்ளனர் .அதோடு போட்டி முடிந்ததும் இந்த ஜெர்சி ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலமாக கிடைக்கும் நிதியை இந்தியாவில் கொரோனோ தடுப்பூசி பணிகளுக்கு வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “தற்போது எங்கள் அணியின் மாற்று வீரர்கள் சிலர் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் விளையாடிய கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளனர் .
அவர்களுக்கு பதிலாக இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இலங்கையில் அதிக அளவில் விளையாடி உள்ளனர். அங்குள்ள ஆடுகளங்களும் ,ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆடுகளமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் அதற்கு தகுந்தவாறு எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் .அவர்களுடைய திறமை எங்கள் அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மேலும் அணியில் வீரர்கள் சிலர் போட்டியில் இருந்து விலகினாலும் நாங்கள் வலுவுடன் இருப்பதாகவே உணர்கிறோம். அதோடு புதிய வீரர்களின் வருகை எங்கள் அணிக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது .முதல் பாதியில் எப்படி விளையாடினோமோ அதேபோல் 2-வது பாதி ஆட்டத்திலும் விளையாட வேண்டியது முக்கியம் “,இவ்வாறு அவர் கூறியுள்ளார்.