Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற மாணவர்…. வெளிவந்த பரபரப்பு தகவல்…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கோட்டைக்காடு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலம்பட்டி பகுதியில் சொந்தமாக செல்போன் கடை ஒன்று நடத்தி வருகிறார். கடந்த 20-ம் தேதி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு மோகன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மோகன் மறுநாள் காலை மீண்டும் வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மோகன் உள்ளே சென்று பார்த்தபோது 28 ஆண்ட்ராய்டு செல்போன்கள், மடிக்கணினி மற்றும் 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து மோகன் சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் பாலம்பட்டி பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வாலிபர் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்ததால் காவல்துறையினர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாலிபர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பதும், இவர் டிப்ளோமா படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் பாலமுருகன் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து பொருட்களை திருடி சென்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்ததோடு, அவரிடமிருந்து ஆண்ட்ராய்டு செல்போன்கள், மடிக்கணினி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |