தலிபான்களுடன் சேர்ந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுப்பதாக பாகிஸ்தான், சீனா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயகம் அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால அரசினை அமைத்தனர். இவ்வாறு அமைத்த தலிபான்களின் இந்த இடைக்கால அரசை பெரும்பாலான நாடுகள் இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தலிபான்களின் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இருநாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆப்கானிஸ்தானில் தீவிரம் அடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியில் உலகம் கவனம் செலுத்த வேண்டும். இதனைதொடர்ந்து ஆப்கானிஸ்தான் மக்களின் துயரத்தை தணித்து, அவர்களின் அவநம்பிக்கையை துடைத்தெறிய வேண்டும். ஆகவே ஆப்கானிஸ்தான் நாட்டை மறுபடியும் கட்டி யெழுப்பவும், நாடு முழுவதும் வீழ்ச்சியடைவதை தடுக்கவும் தலிபான் நிர்வாகத்துடன் தொடர்ந்து ஈடுபடுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.