தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இரண்டு மகன்கள் இருந்தும் கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.
தேனி மாவட்டம் ஜம்புலிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதம். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்கள் இரண்டு பேரும் வெளியூரில் உள்ளனர். வாழ்வாதாரத்தை காக்க வீட்டு வேலை செய்துவரும் மரகதம் வயதான நிலையில் இரண்டு மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
வினாடிக்கு 1,200 கன அடி வீதம் சென்று கொண்டிருக்கும் தண்ணீரில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்ட மரகதம் 200 மீட்டர் தூரத்தில் ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்து அவரை உயிருடன் மீட்டனர். மேலும் முதலுதவி அளித்து மரகதத்தை வீட்டுக்கு அனுப்பிய காவல்துறையினர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.