தேனி மாவட்டத்தில் ஏ.டி.எம் மையத்திற்கு வந்த விவசாயியின் பணத்தை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள மஞ்சளாறு பகுதியில் முருகேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்காக தேவதானப்பட்டியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த இளைஞர் ஒருவரை அழைத்து 14,000 ரூபாயை எடுத்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் 10,000 ரூபாய் மட்டும் எடுத்து முருகேசனிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள 4 ஆயிரத்தை அவரது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் கேட்டபோது 10,000 மட்டுமே எடுக்க முடிந்ததாகவும் மீதமுள்ள பணத்தை சிறிதுநேரம் கழித்து எடுத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து முருகேசன் வீட்டிற்கு சென்ற பின்னரே அவரது வாங்கி கணக்கில் இருந்து 14,000 எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் உடனடியாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து முருகேசன் அந்த ஏடிஎம் பகுதியில் ரகசியமாக கண்காணித்த போது அந்த இளைஞர் மீண்டும் ஏடிஎம்க்கு வந்துள்ளார்.
இதனைப்பார்த்த முருகேசன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் இளைஞரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் காமக்காபட்டியை சேர்ந்த காமேஸ்வரன்(22) என்பதும், பட்டப்படிப்பு படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வருபர்களிடம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து காவல்துறையினர் காமேஸ்வரனை கைது செய்துள்ளனர்.