சவுதி அரேபியாவில் நடைபெற்ற விமான தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஏமனில் கடந்த 2014 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில் அரசு படைகளால் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்க முடியவில்லை. இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகளும் இவர்களுடன் இணைந்து களம் இறங்கின. இவர்களின் கூட்டு முயற்சியானது இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வேளையில் ஜிசான் நகரில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலானது ஆளில்லா குட்டி விமானம் மூலம் விமானநிலையத்திற்கு மேலே பறந்து வந்து ஏவுகணை வீசியது. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த 6 பயணிகள், வங்காளதேசத்தை சேர்ந்த விமான நிலைய ஊழியர்கள் 3 பேர் மற்றும் சூடானை சேர்ந்த ஒரு விமான ஊழியர் என மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதன்பின்னர் இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர்.
இதனை குறித்து சவுதி கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் துர்கி அல்-மால்கி கூறியதாவது, “பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் போர்க்குற்றமாகும். இந்நிகழ்வு நடந்த சில மணி நேரத்திலேயே நேற்று அதிகாலை கிங் அப்துல்லா விமான நிலையத்தின் மீதும் வெடிகுண்டுகள் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தபட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் விமான நிலையத்தின் முகப்பு மட்டும் சிறிது இலேசாக சேதம் அடைந்துள்ளது”என்று கூறியுள்ளார்.