சொத்து தகராறில் தம்பி அண்ணனை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தசாமி புதூர் பகுதியில் பெரியசாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு சடையன் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சடையன், தனது அண்ணன் பெரியசாமியிடம் தந்தை வெங்கடாசலத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து 2 பேரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். மேலும் சடையனின் மனைவி மற்றும் மகன், மகள் போன்றோர் கடந்த 8 ஆண்டுகளாக அவரை பிரிந்து பெரம்பலூரில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதற் கிடையில் சடையன் நடுவலூர் பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி இருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பெரியசாமி அந்த நிலம் இருக்கிறதே உனக்கு எதற்கு தந்தையின் நிலத்தையும் கேட்டு தகராறு செய்கிறாய் என்று கூறி சொத்தை பிரித்து கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சடையன் தனது அண்ணன் பெரியசாமியிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொடுக்க பெரியசாமி மறுத்து வந்ததால், ஆத்திரமடைந்த சடையன் அவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதனால் பெரியசாமியின் வீட்டின் அருகில் அரிவாளுடன் சடையன் பதுங்கி இருந்தார்.
அப்போது அங்கு வந்த பெரியசாமியை சடையன் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதன்பின் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெரியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சடையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.