சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடைக்கோடு கல்லுப்பாலம் பகுதியில் செலின்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றார். இதனையடுத்து வழக்கம்போல் அவரது பணியை முடித்துவிட்டு இரவில் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் செலின் குமார் வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வெளியே பார்த்தபோது அங்கு வளாகத்தில் நின்று கொண்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செலின்குமார் வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு துறை நிலையத்திற்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்.
அந்த தகவலின்படி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனாலும் மோட்டார்சைக்கிள் கருகி நாசமானது மற்றும் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் மர்ம நபர் 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கவச உடையுடன் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வெளியே நின்றபடி பெட்ரோல் குண்டு வீசி இருக்கின்றனர். எனவே குண்டு மோட்டார் சைக்கிள், கார் மீது விழுந்து வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது. இவ்வாறு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஆனால் அவர்களின் முகம் சரியாக சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது செலின்குமார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அருமனை காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.