அமெரிக்க நாட்டில் விவாகரத்து குறித்து டிக் டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஒருவரை அவரின் முன்னாள் கணவர் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 29 வயதுடைய சானியா கான், அமெரிக்க நாட்டில் புகைப்பட கலைஞராக இருக்கிறார். அவரின் முன்னாள் கணவரான ரஹீல் அகமது, சானியாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் வீட்டில் கிடந்திருக்கிறார்கள்.
தகவலறிந்து, காவல்துறையினர் அங்கு சென்ற போது, சானியா இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அகமதுவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சானியா, டிக் டாக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
அதில் திருமணமான ஒரு ஆண்டிற்குள் விவாகரத்திற்கு விண்ணப்பித்தது குறித்த விவரங்களை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமணமான பின் தான் சந்தித்த போராட்டங்கள் குறித்து கூறியிருக்கிறார். விவாகரத்திற்கு பிறகு புது வாழ்க்கையை ஆரம்பிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த அஹமது, அவரின் வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் சுட்டு சானியாவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.