நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் பண்பாடு இருக்கிறதா? என்பதில் சந்தேகம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், அதிமுக ஆட்சியின் GST-க்காக எந்தவித போராட்டமும் தாங்கள் நடத்தவில்லை என்றும் மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்தியிலிருந்து வலியுறுத்தி பெற்றதாகவும் கூறியுள்ளார். எந்த விவரமும் அறியாமல், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவரை வளைகாப்பு அமைச்சர் என்றும் விமர்சித்தார்.
தற்போது, தமிழ்நாடு, போதை மாநிலமாக மாறிவிட்டதாகவும், ரவுடிகளின் ராஜ்ஜியம் நடந்து வருவதாகவும், குற்றம் சாட்டினார். மேலும், பழனிவேல் தியாகராஜன், எதிர்கட்சிகளை மோசமாக பேசுவதும், அரசியல் கட்சி தலைவர்களை விமர்சிப்பதும், இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லை என்று கூறினார்.
மேலும், அவர் பேசுகையில், நிதியமைச்சர், எதிர்கட்சிகளை ஆட்டு மந்தை மற்றும் மாட்டு மந்தை என்றெல்லாம் விமர்சிக்கிறார். அவர் 2016-ல் வெளிநாட்டில் படித்துவிட்டு, இங்கு வந்ததார், அவருக்கு நிதியமைச்சர் பதவியை தி.மு.க வினர் கொடுத்துவிட்டனர். ஆரம்பத்திலிருந்து கட்சியில் இருப்பவர்களுக்கு தான், பிறரை மதிக்க வேண்டும் என்பது தெரியும். இவ்வாறு பண்பாடு இல்லாத நிதியமைச்சரை, தமிழ்நாடு பெற்றிருப்பது, வேதனையாக உள்ளது.