உலகில் கல்வி வளர்ச்சியில் தலைசிறந்த நாடாக முதலிடத்தில் இருப்பது பின்லாந்து. அந்நாட்டில் கல்வி முறையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது தெரியுமா?. அங்கு ஏழு வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல துவங்குகின்றனர். எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அசைவிலும் ஒளியிலும் இருந்து கற்க ஆரம்பிக்கிறது. அதாவது இலை உதிர்வது, செடி துளிர்ப்பது, இசை ஒழிப்பது, பறவை பறப்பது கூட குழந்தைகளுக்கு ஒருவித கல்விதான்.
ஏழு வயதில் பள்ளி செல்லும் பின்லாந்து நாட்டு குழந்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் கூட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளி செல்கின்றது. மீதி நாட்கள் குழந்தைகளுக்கு விடுமுறைதான். அதுமட்டுமல்லாமல் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்தில் படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு மற்றும் பிற கலைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை உண்டு. படிப்பதற்கு விருப்பம் இல்லை அல்லது சோர்வாக இருந்தால் மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். குறிப்பாக 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம்,மதிப்பெண் அட்டையை தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. பெற்றோர் தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
கற்றலில் போட்டி கிடையாது என்பதால் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற மன உளைச்சலும் மாணவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களுக்கு வீட்டுப்பாடம் கூட தரப்படுவது இல்லை. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அந்த பாடத்தை அவர்கள் படிக்கலாம். ஒவ்வொரு பள்ளியிலும் அதிகபட்சமாக 600 மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள்.
அந்நாட்டில் தனியார் பள்ளிகளே கிடையாது. கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம் உள்ளது. கோடீஸ்வரராக இருந்தாலும் அரசுப் பள்ளியில்தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். தேர்வுகளை அடிப்படையை முறைகளாக கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான் உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இதைக் கண்டு உலகமே திகைத்துப் போய் உள்ளது.