பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி, 130 கோடி மக்களுக்காக சேவை செய்வதை மிகசிறந்த வாய்ப்பாக கருதுகிறேன் என்று பேசியுள்ளார்
17-வது மக்களவையில் கடந்த 20-ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர். இதையடுத்து மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ அதை விவாதித்து நிறைவேற்றுவோம். எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று வலுவாக செயல்படுவோம்.
மக்களவையின் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகள். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களை வரவேற்கிறேன். இந்திய மக்கள் தங்களைவிட தேசத்தையே அதிகம் விரும்புகிறார்கள்; அதனால் தான் நிலையான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தல் என்பதை யார் வென்றார்கள் யார் தோற்றார்கள் என நான் பார்ப்பதில்லை. இந்திய மக்களுக்காக பணியாற்றி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே என்னைப்பொருத்தவரை மனதிற்கு திருப்தி தரும்.
நாட்டை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோள், பாதையிலிருந்து நாங்கள் விலகவேயில்லை. நாட்டை உயர்த்துவதென்பது, ஒவ்வொரு இந்தியனும் அதிகாரமிக்கவனாவதும் நாட்டில் நவீன உள்கட்டமைப்பு உருவாவதும் தான். குறிப்பிட்ட சில தலைவர்கள் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் ஆனால், ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாகவே நாங்கள் பார்க்கிறோம். 130 கோடி மக்களுக்காக சேவை செய்வதைசிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தை தற்போது யாரும் பெரிதாக கூட பாராட்டுவதில்லை. பாஜக அரசு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா தந்தது; மன்மோகனுக்கு காங்கிரஸ் ஏன் பாரத ரத்னா தரவில்லை?. மக்களின் நம்பிக்கையை பெறுவதைத் தவிர வேறு ஒரு பெரிய வெற்றி இருக்கவே முடியாது. சுதந்திர போராட்டத்தின்போது உயிரைநீர்த்த போராளிகள் கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு நாம் அனைவரும் 75வது சுதந்திர தினத்தை அணுகவேண்டும்