வங்கியின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பாக எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நிறைய ஆவணங்களை சிதறிக் கிடந்துள்ளன. இதையடுத்து அந்த ஆவணங்களில் பல்வேறு பகுதியில் உள்ள எஸ்பிஐ கிளைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு சிதறிக் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் எஸ்பிஐ வங்கியில் லோன் சம்பந்தமான ஆவணங்கள் என்று கருதி கலெக்டர் அலுவலகம் முன்பாக உள்ள ஏடிஎம் மையத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.
வங்கியில் இருக்க வேண்டிய ஆவணங்கள் சாலையில் சிதறிக் கிடப்பதை காவல்துறையினர் வந்து பார்த்துள்ளனர். இதையடுத்து அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்களை கொண்டு தொடர்பு கொண்டு விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் எஸ்பிஐ வங்கியில் பணியாற்றும் யாராவது இதை வீசி சென்றிருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் வங்கி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.