Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீட் தேர்வில் இருந்து விலக்கு” அதிமுக அதிரடி தீர்மானம் ….!!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டு கூடிய பொதுக்குழு, செயற்குழு:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்குப் பின் கடந்த 2017 செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் பதவி உள்ளிட்ட சிலரின், அதிமுக உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கே கட்சியை வழிநடத்த முழுஅதிகாரம் உண்டு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். கஜா புயல் காரணமாக 2018ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு கூடிய பொதுக்குழு, செயற்குழு:

இதற்கிடையே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.
* இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்.
* மருத்துவ மேற் படிப்புகளில் பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தல்
* தமிழ்நாடு அரசுக்குத் தரவேண்டிய பெரும்தொகையை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.
* கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு.

* காவிரி, கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை.

* அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
* தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றிற்காக தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு.
* தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி.
* விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்குப் பாராட்டு.
* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி.

* பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு.
* இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்வி முறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.
* உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என தீர்மானம்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுமாறு தொண்டர்களுக்கு, அதிமுக அழைப்பு விடுத்தது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Categories

Tech |