தமிழக முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை ஒன்றியம், மொண்டிப்பட்டியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக இந்தத் திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த திட்டத்தின் மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையால் அவதிப்படும் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்க்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்முறை மருத்துவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு, திரும்பியபோது அவரது காரை நிறுத்திய பெண் ஒருவர் “சார் மாஸ்க்கை எடுங்க, எப்ப சார் உங்க முகத்த பாக்குறது” என்று கேட்டுள்ளார். அதை ஏற்று மாஸ்க்கை எடுத்து தனது முகத்தை காட்டிய ஸ்டாலின், அந்தப் பெண்ணிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டார்.