அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை கழகமே முடிவெடுக்கும். தலைமை கழகம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கான வேலைகளை தலைமை கழக நிர்வாகிகள் பார்த்துக் கொள்கின்றோம்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதோடு கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும். நிர்வாகிகள் இஷ்டத்திற்கு பேச வேண்டாம் என கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அப்படி பேசினால் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் பாதிக்க கூடிய சூழல் ஏற்படும். நீங்கள் வெற்றிக்கான வேலையை பாருங்கள். தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க வேண்டும். மேலும் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் ? என்பதையும் தலைமையே முடிவு செய்யும் என்ற இபிஎஸ், பாஜக தன்னை கட்டுப்படுத்துவதாக சிலர் நினைப்பது உண்மை இல்லை என்றும் அவர் பேசியிருக்கிறார்.
அத்தோடு இந்த ஆலோசனை கூட்டத்தில் விரைவில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரமாண்ட மாநில மாநாடு நடத்தி பலத்தை காட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து இருப்பதாகவும், மாநாடு நடைபெறும் தேதி இடம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எனவே பாஜக அதிமுக கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி உறுதி செய்துள்ளதாக தொண்டர்கள் பார்க்கின்றனர்.