முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லரை இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதராக அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கமுறையை பின்பற்றிவரும் மனுஷி சில்லர், இதுவரை தனக்குக் கிடைத்த பல்வேறு உலக மேடைகளிலும்கூட சைவ உணவு முறையைப் பற்றி உரையாற்றி வந்துள்ளார்.
பீட்டாவின் இந்த விருதினைப் பற்றி, சைவ உணவுப் பழக்கம் என்பது தனக்கு ஒரு வாழ்வியல் முறை என்றும், தனது பெற்றோர்கள் சைவ உணவுப் பழக்கத்தைக்கொண்டிருந்தபோதும் தன்னை சைவ உணவுப் பழக்கத்திற்குள் திணிக்கவில்லை, தானாகவே விரும்பி அதைத் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சைவ உணவுப் பழக்கமுறை ஆரோக்கியமான உடல் நலத்திற்கு வழிவகுப்பதாக தெரிவித்த அவர், ஒரு விலங்குகள் நல ஆர்வலராக, தான் இந்த விருதிற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி, ஆறாவது முறையாக இந்தியாவிலிருந்து உலக அழகிப் பட்டம் வென்ற பெருமைக்குரியவர் ஆவார்.மேலும், விரைவில் சரித்திரப் படமான ’ப்ரித்விராஜ்’ திரைப்படத்தில், அக்ஷய் குமார் ஜோடியாக மனுஷி சில்லர் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.