சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக கட்சிக்கு, கடந்த 2017 ஆம் வருடத்திற்கான வரலாறு மீண்டும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப், உத்திரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் நேற்று அறிவிக்கப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு வருகிறது.
அம்மாநிலத்தில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பது மட்டுமல்லாமல் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் பெரிய வாய்ப்பும் கிடைக்கும். கடந்த 2017 ஆம் வருடத்தில் பாஜக அங்கு வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது வெற்றி பெற தீவிரமாக போராடி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ், இழந்த செல்வாக்கு மற்றும் வாக்கு வங்கியை மீண்டும் பெற கடினமாக உழைத்து வருகிறது.
எனினும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை எளிதாக கூறிவிட முடியாது. அம்மாநிலத்தில், கடந்த 1985ஆம் வருடத்திலிருந்து எந்த முதலமைச்சரும் தொடர்ந்து இரண்டு தடவை ஆட்சியை பிடித்ததில்லை. அதனை 37 வருடங்களுக்கு பின் யோகி ஆதித்யநாத் மாற்றி அமைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் பாஜக அதிக பெரும்பான்மையைப் பெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளிலும் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த 1980-ஆம் வருடத்திற்கு பின் கடந்த 2017ஆம் வருடம் பாஜக தான் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
கடந்த, 2017 -ஆம் வருடம் பாஜகவிற்கு சிறப்பான வருடமாக அமைந்தது. அதே போல், இந்த வருடமும் பாஜகவிற்கு அமையுமா? இல்லையெனில் அந்த வரலாறு மாற்றி அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.