சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் நடத்திய பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.
கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்துள்ளது நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. சேலத்தை பொறுத்தவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் நெருங்கி பழகிய 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு முதற்கட்டமாக சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த சேலம் மருத்துவமனை டீன், ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் அதிக நபர்களுக்கு குறுகிய நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என தகவல் அளித்துள்ளார். ஒரு கருவி மூலம் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும். ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை செய்வதன் மூலம் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்தலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் ஒரு மணி நேரத்தில் 20 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 20 பேருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ரேபிட் டெஸ்ட் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா முடிவை சேலம் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையிலும் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை துவங்கியது. கோவையிலும் இந்த கருவி மூலம் பரிசோதனை தொடங்கியது.