ராணிப்பேட்டை அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன்-மனைவி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் ஊர் ஊராகச் சென்று கேஸ் அடுப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் புலிவளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியை ஒட்டியுள்ள ஒரு வீட்டில் கேஸ் அடுப்பை சரி செய்ய சென்றுள்ளார் காளியப்பன். அங்கு நடராஜன் அங்கம்மாள் என்கிற திருமணமான ஜோடியினர் வசித்து வருகின்றனர்.
அவரது வீட்டில் அடுப்பு சர்வீஸ் செய்து விட்டு சரியாக எரிகிறதா என்று சோதித்துப் பார்க்கும் பொழுது திடீரென கசிவு காரணமாக தீ பற்றி சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. சிலிண்டர் வெடித்ததும் அங்கிருந்து காளியப்பன் அங்கம்மாள் நடராஜன் ஆகிய மூவரும் தப்ப முயன்றனர். ஆனால் அவர்கள் மீதும் தீப்பற்றியதோடு வீட்டின் மேல்தளம் இடிந்து அவர்கள் மேல் விழுந்தது.
அதே போல் விபத்தில் அரசு பள்ளியின் சுற்று சுவரும் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பள்ளி ஆங்கில ஆசிரியை முல்லை என்பவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த முல்லை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட மற்ற மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேஸ் வெடித்து சிதறிய விபத்தில் கணவன் மனைவி உட்பட 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.