துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியின் டிக்கெட்கள் வரும் 18 ஆம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படவுள்ளது.
துபாய் எக்ஸ்போ 2020 ஆம் வருடத்திற்கான கண்காட்சியின் அதிகாரிகள், டிக்கெட் விலை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து 2022 ஆம் வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை சுமார் ஆறு மாதங்களுக்கு துபாயில் பிரம்மாண்ட எக்ஸ்போ 2020 உலகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.
இதனை காண்பதற்கு, உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து 2 கோடி பேர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியா மற்றும் அமீரகம் உட்பட சுமார் 192 நாடுகள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளதால், அந்தந்த நாடுகளுக்கு என்று தனித்தனியாக அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணங்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் முதல் தடவை பார்வையிட 95 திர்ஹாம் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கான பாஸ் 495 திர்ஹாம் செலுத்தி பெற வேண்டும். இதில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அனுமதி இலவசம். மாற்றுத்திறனாளிகளுடன் வரும் நபர்களுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்படும்.
60 வயதுக்கு அதிகமான நபர்கள் அடையாள அட்டையை காண்பித்தால், இலவச அனுமதி உண்டு. மேலும் உலகிலுள்ள எந்த நாடுகளில் படிக்கும் மாணவர்களும் தங்கள் பள்ளியின் அடையாள அட்டையை காண்பித்தால் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 195 திர்ஹாம் செலுத்தி மாதத்திற்கான பாஸ் பெறலாம்.
இதற்கான டிக்கெட்டுகள் வரும் 18-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கொரனோ தடுப்பூசியை, பார்வையாளர்கள் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்பது இல்லை. எனினும் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.