எக்ஸ்போ கண்காட்சியின் வளாக கட்டுமான பணியில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த தகவலை அமீரகம் தற்போது வெளியிட்டுள்ளது.
உலகின் மிக பிரமாண்டமான ‘துபாய் எக்ஸ்போ-2020’ கண்காட்சி அக்டோபர் 1 ஆம் தேதி துபாயில் தொடங்கியது. இந்த விழாவில் இந்தியா உட்பட 192 நாடுகள் கலந்து கொண்டன. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 1000 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தை அமீரக அரசு கட்ட தொடங்கியது. இந்தக் கட்டுமானப் பணியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் 2 லட்சம் பேர் பணியாற்றியுள்ளனர்.
இந்த நிலையில், கட்டுமான பணியில் அதிகளவில் விபத்துகள் நடந்ததாகவும் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் பாஸ்போர்ட்டுகளை பறித்து வைத்து, மிரட்டியதாகவும் உலகளவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் இது குறித்த அமீரக அரசிடம் விவரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் அமீரக அரசு இதற்கு பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கு பெறாது என்று கூறினர்.
இது குறித்து கண்காட்சியின் தகவல் தொடர்பாளர் ஸ்கோனாய்ட் மெக்ஜியாசின் நேற்று பேட்டியளித்தார். அதில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறினார். மேலும் இது குறித்த விவரங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.
இந்த கண்காட்சியில் இந்தியா ₹400 கோடி செலவில் 4 மாடிகள் கொண்ட பிரமாண்ட அரங்கத்தை நிரந்தர கட்டடமாக அமைத்துள்ளது. இதன் மூலம் கண்காட்சிக்கு பின் வர்த்தகம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தவும் மேலும் பல்வேறு வகைகளில் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் இந்திய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.